Monday, June 21, 2010

மரணமும் வாழ்க்கையும்

கப்பலில் முதன் முதலாகப் பயணம் செய்தார் ஒருவர். பரந்து கிடக்கும் கடலில் எப்பொழுது வேண்டுமானாலும் கப்பல் மூழ்கி விடலாம். பயணம் வெற்றியாக அமைந்து ஊர் போய்ச் சேர்வோம் என்ற உறுதி யாருக்கும் இல்லை.
கப்பலிலேயே எப்பொழுதும் பணிபுரிகின்ற மாலுமிகளின் நிலை இதை விட மோசம் என்று திகைத்தார் அவர்.

அங்கிருந்த மாலுமி ஒருவனை அழைத்த அவர் உன் தந்தையார் என்ன பணிபுரிந்தார் ? என்று கேட்டார்.

என் தந்தையாரும் என்னைப்போல் கப்பலின் மாலுமியாகப் பணிபுரிந்தார். ஒரு நாள் அவர் பயணம் செய்த கப்பல் புயலில் சிக்கி மூழ்கியதால் அவர் இறந்து விட்டார் என்றான்.

சரி உன் தந்தையாரின் தந்தையார் என்ன செய்தார் ? என்று கேட்டார் அவர்.
அவரும் மாலுமியாகத்தான் பணிபுரிந்தார். அவரும் கப்பரோடு மூழ்கி இறந்து போய் விட்டார். என்று பதில் சொன்னான் மாலுமி.

என்ன ? உன் தந்தையாரும் அவர் தந்தையாரும் கப்பலில் பயணம் செய்யும் போது இறந்து விட்டார்கள என்கிறாய். நீயும், மாலுமியாக இருக்கிறாய். கடலில் மூழ்கி இறந்து விடுவோம் என்ற அச்சம் உனக்கு இல்லையா ? என்று கேட்டார்.

உங்கள் தந்தையார் எப்படி இறந்தார் ? என்று கேட்டான் மாலுமி.

படுக்கையில் படுத்திருக்கும் போது.
அவருடைய தந்தையார் எப்படி இறந்தார்?
அவரும் படுக்கையில் படுத்திருக்கும் போது தான் இறந்தார் என்றார்.

உங்கள் தந்தையாரும் அவர் தந்தையாரும் படுக்கையில் படுத்திருக்கும்போது தான் இறந்து இருக்கிறார்கள். நீங்கள் எப்படி அச்சமில்லாமல் படுக்கையில் படுத்து உறங்குகிறீர்கள் ? என்று கேட்டான் மாலுமி

அப்பொழுதுதான் அவருக்கு உண்மை புரிந்தது. உயிரை எப்பொழுதும் காப்பாற்றி வைக்க முடியாது. அது நம் உடலை விட்டு நீங்கியே தீரும். நமக்குரிய கடமைகளை செய்து கொண்டு அச்சமின்றி வாழ்வதே மேலான வாழ்க்கை என்பதை அவர் உணர்ந்து கொண்டார்.
`
`


இனிய காலை வணக்கம்...

No comments:

Post a Comment