Thursday, July 29, 2010

எங்கே விழுந்திருக்கிறோம்?

அந்த இளைஞர்கள் இருவருக்கும் வேட்டையாடுவதில் அதிக விருப்பம். எனவே, அவர்கள் அடிக்கடிக் காட்டுக்குச் செல்வது வழக்கம்.

ஒருநாள், சிறிய விமானம் ஒன்றை வாடகைக்கு எடுத்துக் கொண்டு காட்டுக்குச் சென்றனர். வேட்டையில் இரண்டு காட்டு எருமைகள் கிடைத்தன. அவற்றை எடுத்துக்கொண்டு புறப்பட்டனர்.

விமான ஓட்டுனர் சொன்னார் : ''ஐயா, இரண்டு எருமைகளுடைய எடையையும் இந்த சிறிய விமானம் தாங்காது. வேண்டுமானால் ஒன்றை ஏற்றிக்கொள்ளலாம்'' என்றார்.

உடனே இளைஞர்கள், ''கடந்த வாரமும் எங்களுக்கு இதே போல் இரண்டு எருமைகள் கிடைத்தன. அப்போது எங்களுடன் வந்த விமான ஒட்டுனர், இரண்டையும் ஏற்றிக்கொள்ள சம்மதித்தாரே!'' என்றனர்.

''ஓ! அப்படியா? அப்படியென்றால் சரி! இப்போது இரண்டு எருமைகளையும் ஏற்றலாம்.''

இளைஞர்கள், எருமைகளை விமானத்தில் ஏற்றினர். புறப்பட்ட சில நிமிடங்களிலேயே பாரம் தாங்காமல் தடுமாறிய விமானம் வயல்வெளியில் விழுந்தது.

உள்ளே இருந்து வேட்டைக்கார இளைஞர்கள் இருவரும் மெள்ள வெளியே வந்தனர். ஒருவன் கேட்டான் : ''இப்ப நாம எந்த இடத்துல விழுந்திருக்கோம்?''

அடுத்தவன் பதில் சொன்னான் : ''போன வாரம் விழுந்தோமே, அதுக்குப் பக்கத்து வயல்லதான்!''

இந்த வேடிக்கை கதை விளக்குகிற உண்மை என்ன?

அனுபவங்கள் நமக்குப் பாடமாக வேண்டும். இல்லையெனில், இப்படித்தான் அடிக்கடி விழ வேண்டி இருக்கும்.

தவறு செய்த பக்தன் ஒருவன், தவறுக்குப் பரிகாரம் தேட கோயிலுக்குச் சென்றான்.

''கடவுளே, தப்பு செஞ்சுட்டேன். என்னை மன்னிச்சுடு'' என்று வேண்டினான். மன்னிப்பு கிடைத்தது. மன நிறைவுடன் திரும்பினான்.

அதன் பின்னர் அந்தத் தவறை அவன் செய்யாமல் இருக்க வேண்டும். அதுவே அவனுக்கும் பெருமை; ஆண்டவனுக்கும் பெருமை.

மன்னிக்கப்படுவது என்பது மறுபடியும் அந்தத் தவறைச் செய்யாமல் இருக்கவே!

ஆன்மிகத்தை தவறாகப் புரிந்து கொண்டால், விளைவுகள் வேறு மாதிரி ஆகிவிடும்.

தமாஷான ஓர் உதாரணம்...

''ஆண்டவன் நம்ம பாவங்களை மன்னிக்கணும்னா நாம என்ன செய்யணும்?''

''நாம முதல்ல பாவங்களைச் செய்யணும்!''
---------------------------------
தென்கச்சி கோ. சுவாமிநாதன்

1 comment: