மைதிலி தையல் நிலையம்
ஒரு பழைய தையல் இயந்திரம்,
உடைந்து போன ஒரு நாற்காலி,
உடைந்த சில ஊசிகள்,
ஒட்டு போட்ட அளவெடுக்கும் டேப்.
இப்படி,
மழை நீர் ஒழுகும் என் குடிசை திண்ணையில்,
பரிதாப நிலையில் என் தையல் நிலையம்.
என்னைச் சுற்றி சிதறும் துண்டு துணியில் தான்,
வண்ண உடைகள் தைத்து -
எனது ஆறு வயது மகள்
மைதிலிக்கு சூட்டி மகிழுவேன்.
எப்பொழுதும், ஏதோ ஒரு பாடலை,
அரைகுறையாக என் மனைவி பாட - உடனே
ஆர்வமாய் அடுத்த வரி என்னவென்று நான் கேட்க -
அவளோ, போடா என்று சொல்லி
செல்லமாய் என் தலையில் குட்டுவாள்.
சமையலறைக்குள் நான் வந்தால் போதும்,
அதை தூக்கி வை, இதை இறக்கி வை - என்று
என்னை எடுபிடி வேலை செய்யச் சொல்லி
ரொம்பவும் கெடுபிடி செய்வாள்.
ஒரு நாள், ஓயாமல் பெய்த மழையில்,
என் மனைவிக்கு தெரியாமல்
நானும், மைதிலியும் நனைந்து விளையாட,
என் மைதிலிக்கு மட்டும் காய்ச்சல் வந்தது.
அன்று கொட்டிய மழையில்
தெரு விளக்கும் நனைந்ததால் என்னவோ - அதுக்கும்
மின் வெட்டு காய்ச்சல் வந்து துடியாய் துடித்தது.
அது போல தான் நானும் துடித்தேன்,
என் மைதிலிக்கும் காய்ச்சல் வந்ததால்.
அந்த திருட்டு காய்ச்சல் வளர்ந்து,
என் சொந்த வீட்டையே
அடகுக் கடைக்கு விலை பேசியது.
சில நாள் கழித்து,
ஒரு வழியாக என் மைதிலி
எங்களுக்கு திரும்ப கிடைத்தாள்.
அன்றில் இருந்து,
சில நாள் முள்காட்டில் விறகு வெட்டி
கண்ணீர் வடித்தேன்.
சில நாள் செங்கற் சுளையில்
வேலை செய்து வியர்வை வடித்தேன்.
என் கண்ணும் சிவந்து போனது,
என் கையும் சிவந்து போனது.
செங்கல் ஒன்றுக்கு பத்து காசு சேர்த்து,
என் மைதிலிக்கு குட்டி பொம்மையும், பிஸ்கட்டும் வாங்கி வருவேன்.
முள்விறகு எடை ஒன்றுக்கு இருபது காசு சேர்த்து,
நானும் சாப்பிட்டேன் என்று பொய் சொல்லி,
என் மனைவிக்கு மட்டும் பிரியாணி வாங்கி வருவேன்
Very nice Arun Karthick.
ReplyDeleteThank you satya
ReplyDelete